ADDED : ஜன 25, 2024 01:12 PM

புதுடில்லி: கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இன்று (ஜன.,25) மீண்டும் பா.ஜ.,வில் ஜெகதீஸ் ஷெட்டர் இணைந்தார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், ஹூப்பள்ளி - தார்வாட் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர், சீட் எதிர்பார்த்தார். ஆனால், புதியவர்களுக்கு மேலிடம் வாய்ப்பளித்ததால், கொதிப்படைந்த அவர் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.
அதன் பின் இவரை எம்.எல்.சி.,யாக காங்., மேலிடம் தேர்வு செய்தது. அதிக எதிர்பார்ப்புடன், காங்கிரசில் இணைந்த ஷெட்டருக்கு, இங்குள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஷெட்டரை பா.ஜ.,வுக்கு அழைத்து வர, மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா உடன் இருந்தார். இதையடுத்து இன்று மீண்டும் அவர் பா.ஜ.,வில் இணைந்தார்.