ADDED : நவ 01, 2024 07:15 AM

நடப்பாண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணியில் கர்நாடகாவை சேர்ந்த ஒன்பது பேர் பங்கேற்றனர்.
இவர்களில் கலப்பு ஓட்டப்பந்தயம் போட்டியில் பங்கேற்ற எம்.ஆர்.பூவம்மா, 34, முக்கியமானவர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பிறந்தவர். சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
அதுவும் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாகக் கூறி, 2021ல் இரண்டு ஆண்டுகளுக்கு தடகள போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதன் பலனாக நடப்பாண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக்கிங் 4x400 மீட்டர் 'ரிலே' போட்டியில் இந்திய வீராங்கனையர் பூவம்மா, ரூபால் சவுதரி, ஜோதிகா ஸ்ரீதண்டி, சுபா வெங்கடேசன் இணைந்து, 3.29 நிமிடத்தில் இலக்கை கடந்து, இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
இத்தனைக்கும், இந்த அணியில், பூவம்மாவை விட மற்றவர்கள், 10 வயது குறைந்தவர்கள். ஆனாலும், அதை கருத்தில் கொள்ளாமல், அனைவரும் வீராங்கனையர் என்ற எண்ணத்தில் பங்கேற்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதுதொடர்பாக பூவம்மா கூறியதாவது:
ஒலிம்பிக் போட்டிகளில் 2008, 2016ல் பங்கேற்றேன். ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன் ஷிப், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, நாட்டுக்காக பல பதக்கங்களை பெற்றுள்ளேன்.
ஆனாலும், மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக என் வயதை பொருட்படுத்தாமல் பங்கேற்றேன்.
பாட்டியாலாவில் 2021ல் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1ல் நடந்த போட்டிக்கான சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக, எனக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
நான் சோர்வு அடைந்தேன். அனைத்தையும் விட்டுவிட நினைத்தேன். ஆனால், என் கணவர் ஜிதின் பால் எனக்கு தைரியம் ஊட்டினார். அவர், முன்னாள் சர்வதேச தடகள வீரராவார். தடை முடிவடையும் வரை காத்திருக்குமாறு கூறினார். அவர் நினைத்தபடி, இந்திய அணியில் இடம் பெற்று, நாட்டுக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.