ADDED : செப் 25, 2024 07:39 AM
வடமாநிலங்களில் இருக்கும் செல்வாக்கு தென் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு இல்லை. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் தான் ஆட்சிக்கு வந்தது. அனைத்து தென் மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதற்கு கர்நாடகா தான் நுழைவு வாயில் என, அக்கட்சி மேலிடம் அவ்வப்போது கூறி வருகிறது.
கர்நாடகாவில் பா.ஜ.,வை வளர்க்க முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் அதிகமாக உழைத்துள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு கட்சி மேலிடம் முதல்வர் பதவி அளித்து கவுரவப்படுத்தியது.
ராஜினாமா
ஆனால் கட்சியிலும், ஆட்சியிலும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பதவி கொடுப்பதாக எடியூரப்பா மீது, கட்சிக்குள் இருக்கும் கர்நாடகாவின் மூத்த தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். பல காரணங்களால், 2020ல் கட்சி மேலிடம் உத்தரவுபடி முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெறும் 66 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டது தோல்விக்கு காரணம் என, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
சட்டசபை தேர்தல் முடிந்ததும், கட்சிக்கு புதிய மாநில தலைவரை, மேலிடம் தீவிரமாக தேடியது. ஆறு மாதங்களுக்குப் பின் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கடும் எரிச்சலை கிளப்பியது.
முதல் முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவருக்கு தலைவர் பதவியா என தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர்.
மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் விஜயேந்திராவின் தலைமையை விரும்பவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என குரல் கொடுக்கின்றனர்.
அறிவுரை
இந்நிலையில் கர்நாடக பா.ஜ.,வில் நிலவும் உட்கட்சிப் பூசலை சரி செய்ய, சில தினங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நடத்தியது. கட்சியின் மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து செல்ல வேண்டுமென விஜயேந்திராவுக்கு அறிவுரை கூறப்பட்டது.
கட்சிக்குள் நடக்கும் விஷயங்களை பொது இடத்தில் பேச வேண்டாம் என, மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும் இன்னும் விஜயேந்திராவுக்கு எதிராக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நடத்தியபோது, 'உங்கள் மனதில் உள்ள கருத்துகளை எழுதிக் கொடுங்கள்' என்று கேட்டுக் கொள்ளப் பட்டது. இதில் ஒரு சிலர் விஜயேந்திராவை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என எழுதிக் கொடுத்து உள்ளனர்.
மகிழ்ச்சி
இது பற்றி கட்சி மேலிடம் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கட்சி மேலிடம் எக்காரணம் கொண்டும் தலைவரை மாற்றுவதற்கு தயாராக இல்லை. இது விஜயேந்திராவின் எதிர்பாளர்களுக்கு மேலும் எரிச்சலை கூட்டியுள்ளது.
'இளம் தலைவரான விஜயேந்திரா, காங்கிரஸ் அரசை எதிர்த்து, மிகச் சிறப்பான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகிறார்' என, கட்சி மேலிடம் கருதுகிறது.
ஒருவேளை அவரை பதவியில் இருந்து கீழே இறக்கினால், எடியூரப்பா, லிங்காயத் சமூகத்தின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடலாம் எனவும் மேலிடம் யோசிக்கிறது. தலைவர் மாற்றமில்லை என மேலிடம் கூறியிருப்பதால், விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால், எதிர் தரப்பினர், எரிச்சல் அடைந்துள்ளனர். தங்கள் பேச்சை மேலிடம் கேட்கவில்லையே என்று ஆதங்கப்படுகின்றனர்.
-- நமது நிருபர் -