ADDED : ஜன 15, 2025 09:00 AM

பெலகாவி; கர்நாடகாவில், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், 49, சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக, காங்கிரசைச் சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் பதவி வகிக்கிறார்.
சமீபத்தில், பெங்களூரில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்று விட்டு, தன் சகோதரரும், எம்.எல்.சி.,யுமான சன்னராஜ் ஹட்டிஹோலி உடன், காரில் அமைச்சர் லட்சுமி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பெலகாவி மாவட்டத்தில் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சன்னம்மா கிட்டூர் என்ற இடத்திற்கு வந்த போது, சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததாகக் கூறப்படுகிறது. நாய் மீது மோதாமலிருக்க, காரை டிரைவர் திடீரென திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிரைவர், சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதினார். இந்த விபத்தில், காரில் இருந்த அமைச்சர் லட்சுமி, எம்.எல்.சி., சன்னராஜ் ஹட்டிஹோலி ஆகியோர் காயமடைந்தனர்.
அமைச்சர் லட்சுமிக்கு முகம் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.சி., சன்னராஜ் ஹட்டிஹோலிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவர், பாதுகாவலர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விபத்தில் அமைச்சர் லட்சுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இரு நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.