ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கர்நாடக அர்ச்சகர்
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கர்நாடக அர்ச்சகர்
ADDED : ஜன 22, 2024 06:09 AM

பெங்களூரு: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, பூஜைகள் நடத்தும் 101 அர்ச்சகர்களில், கர்நாடகாவை சேர்ந்த அர்ச்சகர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஜனவரி 16ல் இருந்து, பூஜை, புனஸ்காரங்கள் துவங்கப்பட்டன.
காசியின் பிரசித்தி பெற்ற கணேஸ்வர சாஸ்திரி டிராவிட், லட்சுமிகாந்த் தீக்ஷித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழுவினர், சம்பிரதாயப்படி பூஜைகள் நடத்துகின்றனர். இவர்களில் கர்நாடக அர்ச்சகர் இடம் பெற்றுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு, 101 அர்ச்சகர்களை நியமித்த போது, கணேஸ்வர சாஸ்திரியும், லட்சுமி காந்த் தீக்ஷித்தும், அர்ச்சகர் கணேஷ் பட் பெயரை பரிந்துரைத்தனர். இவர் கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, ஒரே அர்ச்சகர். தட்சிண கன்னடா, சுள்யா ஜால்சார் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சகர் கணேஷ் பட்.
1962ல் பிறந்த கணபதி பட், காஞ்சி காமகோடி வித்யா பீடத்தில் ரிக்வேதத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்.
மந்த்ராலயா ராகவேந்திரா மடத்தில் சமஸ்கிருத பட்டம் பெற்றவர். அதன்பின் திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., பட்டம்; சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் உயர் கல்வியில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
சமஸ்கிருத பண்டிதரான இவர், தற்போது திருப்பதியின் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் பரமாச்சார்யா குருகுலம் இயக்குனராக பணியாற்றுகிறார்.
அது மட்டுமின்றி, கேரளாவின் அனைத்து பல்கலைக்கழகங்களின், தேர்வு அதிகாரியாகவும், நாட்டின் 18 பல்கலைக்கழகங்களின் பி.எச்.டி., விடைத்தாள் திருத்துவோராகவும் பணியாற்றுகிறார்.