ADDED : ஜன 07, 2024 02:44 AM

பெங்களூரு : ஆங்கில பெயர் பலகைகளை அடித்து உடைத்த வழக்கில், கர்நாடகா ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடாவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்து உள்ளது.
கர்நாடகாவில் கடைகளில் பெயர் பலகையை 60 சதவீதம் கன்னடத்தில் வைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பிப்ரவரி 24ம் தேதி வரை அவகாசமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடைகளில் பெயர் பலகையை, கன்னடத்தில் வைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 27ம் தேதி, கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர், பெங்களூரு சாதரஹள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
அப்போது கடைகளில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அடித்து உடைத்தனர். இதனால் நாராயண கவுடா உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமின் கேட்டு தேவனஹள்ளி 5வது செசன்ஸ் நீதிமன்றத்தில், நாராயண கவுடா வக்கீல் மனு செய்திருந்தார்.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பிரதார் தேவேந்திரப்பா, இரண்டு லட்சம் ரூபாய் பிணைய தொகையாக கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், நாராயண கவுடாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவர் நாளை சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.