ADDED : ஜன 31, 2024 12:43 AM
மாண்டியா, கர்நாடகாவின் மாண்டியா அருகே தேசியக் கொடி ஏற்ற அனுமதி வாங்கிவிட்டு, ஹனுமன் கொடி பறக்கவிடப்பட்ட விவகாரத்தில், பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறியதற்காக பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், மாண்டியா அருகில் உள்ளது கெரேகோடு கிராமம். இங்கு உள்ள கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில், 108 அடி உயர கம்பம் அமைத்து, தேசியக் கொடி ஏற்ற ஒரு அமைப்பினர் சமீபத்தில் அனுமதி வாங்கினர்.
ஆனால் தேசியக் கொடி ஏற்றாமல் ஹனுமன் கொடியை ஏற்றியதாக சர்ச்சை எழுந்தது. அரசு அதிகாரிகள் சென்று ஹனுமன் கொடியை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறியதற்காக கெரேகோடு பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது குறித்து பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:
கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி, கெரேகோடுவில் ஹனுமன் கொடியை ஏற்ற வாய்ப்பளித்தது மட்டுமின்றி, பிரச்னையை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.