ADDED : ஜன 17, 2025 07:25 AM

விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு, கர்நாடகா முன்னேறி உள்ளது.
விஜய் ஹசாரா கோப்பை, 2024 டிசம்பர் 21ல் துவங்கியது. இதில், கர்நாடகா உட்பட 38 மாநிலங்களை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி போட்டியில், கர்நாடகாவும் - ஹரியானாவும் மோதின. இதில், கர்நாடகா அணி, 6 விக்கெட் வித்தியாத்தில், ஹரியானாவை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.
237 ரன்கள் இலக்கு
முதலில் டாஸ் வென்ற ஹரியானா அணி, 50 ஓவரில் ஒன்பது விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது.
கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ெஷட்டி, 34 ரன்கள் கொடுத்து, நான்கு விக்கெட்களும்; ஸ்ரேயாஸ் கோபால், 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களும்; பிரசித் கிருஷ்ணா 40 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்களும்; ஹர்திக் ராஜ், 61 ரன்கள் கொடுத்து ஒரு வீக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய கர்நாடகா அணியில் துவக்க ஆட்டக்காரரும், அணியின் கேப்டனுமான மயங்க் அகர்வால் மற்றும் தேவ்தத் படிகல் இறங்கினர்.
ஹரியானாவின் அனுசுல் கம்போஜின், முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் மாயங்க் எல்.பி.டபிள்யூ., ஆகி ரன் எடுக்காமல் அவுட்டானார்.
அதற்கு அடுத்து களம் இறங்கிய அனீஷ், நிதானமாக விளையாடினார். கர்நாடக அணி 66 ரன்கள் எடுத்த நிலையில், அவர் 'கேட்ச்' கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ஸ்மரன் ரவிச்சந்திரன் சிறப்பாக விளையாடினார்.
தேவ்தத் படிகல்
தேவ்தத் படிகல் - ஸ்மரன் ரவிச்சந்திரன் சிறப்பாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். படிக்கல், 86 ரன் எடுத்திருந்த போது, நிஷாந்த் சிந்து பந்தில், 'கேட்ச்' கொடுத்து அவுட்டானார். அதன் பின், ஸ்ரீஜித், 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் கோபால், ஸ்மரன் ரவிச்சந்திரனுக்கு இணைந்து விளையாடினார். 45வது ஓவரில், நிஷாந்த் சிந்து வீசிய பந்தில், ஸ்மரன் ரவிச்சந்திரன், 'போல்டு' ஆனார். அதன் பின், அபிநவ் மனோகர் வந்தார்.
47.2 ஓவர்களில், ஹிரியானா அணியை, கர்நாடக அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இறுதி போட்டி நடக்கிறது
. - நமது நிருபர் -