5,059 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நாட்டிலேயே கர்நாடகா முதலிடம்
5,059 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நாட்டிலேயே கர்நாடகா முதலிடம்
ADDED : பிப் 17, 2024 01:19 AM

பெங்களூரு,மின்சார வாகனங்களுக்கு, 'சார்ஜிங் ஸ்டேஷன்' அமைப்பதில், கர்நாடகாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 'பெஸ்காம்' எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசு, மாநில அரசின் மின்துறை அமைச்சர் ஜார்ஜ் அலுவலக புள்ளி விபரங்களின்படி, மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைப்பதில், பெஸ்காமின் பங்களிப்பு அதிகம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 3.31 லட்சம் மின்சார வாகனங்களும், 5,059 சார்ஜிங் ஸ்டேஷன்களும் உள்ளன. டில்லியில் 2.74 லட்சம் மின்சார வாகனங்கள், 1,886 சார்ஜிங் ஸ்டேஷன்கள்; உத்தர பிரதேசத்தில் 7.45 லட்சம் மின்சார வாகனங்கள், 583 சார்ஜிங் ஸ்டேஷன்கள்.
தமிழகத்தில் 2.20 லட்சம் மின்சார வாகனங்கள், 643 சார்ஜிங் ஸ்டேஷன்கள்; கேரளாவில் 1.39 லட்சம் மின்சார வாகனங்கள், 958 சார்ஜிங் ஸ்டேஷன்கள்; மஹாராஷ்டிராவில், 4.15 லட்சம் மின்சார வாகனங்கள், 3,079 சார்ஜிங் ஸ்டேஷன்கள்; ராஜஸ்தானில் 2.33 லட்சம் மின்சார வாகனங்கள், 500 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.
கர்நாடகாவில், மின்சார வாகனங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த விஷயத்தில், நாட்டிலேயே கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.