கர்நாடகாவின் 2வது நந்தி மலை ஷிவமொக்கா குண்டாதிரி ஹில்ஸ்
கர்நாடகாவின் 2வது நந்தி மலை ஷிவமொக்கா குண்டாதிரி ஹில்ஸ்
ADDED : நவ 13, 2024 09:48 PM

பெங்களூருக்கு மிக அருகில் உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ளது நந்திமலை. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இங்கு மலை முகடுகளை தொட்டபடி மேகம் செல்லும்.
இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணியர் தினமும் நந்தி மலைக்கு செல்கின்றனர். நந்தி மலையை போல இன்னொரு இடமும் உள்ளது. அது பற்றி பார்க்கலாம்.
மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் ஷிவமொக்காவின் ஆகும்பே அருகே அமைந்துள்ளது குண்டாதிரி மலை. மேற்கு தொடர்ச்சி மலை முகட்டில் வருவதால் இந்த மலை, இயற்கை அழகையும், வசீகரமான காட்சிகளையும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது.
இந்த மலையில் 23வது தீர்த்தங்கரரான பசவநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். பல கல் சிலைகள் மற்றும் மரகத பச்சை நீரை கொண்ட இரண்டு கம்பீரமான குளங்கள் இந்த மலைக்கு மேலும் அழகை சேர்க்கிறது.
அடிவாரத்தில் இருந்து மலை உச்சி 7 கி.மீ.,யில் அமைந்துள்ளது. கரடு முரடான நிலப்பரப்புகள், சிறிய நீரோடைகள், காட்டு தாவரங்கள் வழியாக பயணம் மிகவும் அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு அடியிலும் அதன் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் இயற்கை சூழலால் நீங்கள் மனம் மயங்கி போய்விடுவீர்கள்.
அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பைக்கில் செல்லலாம். ஆனால் மிகவும் கவனமாக செல்ல வேண்டியது அவசியம். மலை உச்சியில் இருந்து இயற்கை அழகை கண்டு ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பெங்களூரிலிருந்து குண்டாதிரி மலை 376 கி.மீ.,யில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து பஸ்சில் சென்றால் தீர்த்த ஹள்ளியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார்களில் செல்லலாம்.
ரயிலில் செல்பவர்கள் ஷிவமொக்கா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.
- நமது நிருபர் --