ஊழலில் கர்நாடகா நம்பர் ஒன் முதல்வரின் ஆலோசகர் அதிரடி
ஊழலில் கர்நாடகா நம்பர் ஒன் முதல்வரின் ஆலோசகர் அதிரடி
ADDED : ஏப் 09, 2025 11:39 PM

கொப்பால் :''ஊழலில், நாட்டிலேயே கர்நாடகா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் நிதி ஆலோசகராக பசவராஜ் ராயரெட்டி உள்ளார். இந்நிலையில், பிராந்திய ஏற்றத்தாழ்வு குறைதீர் குழுவின் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டம், கொப்பாலில் நேற்று நடந்தது.
இருள் சூழும்
இதில், பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது:
இன்றைய காலத்தில் தேர்தல்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. சாதாரண நபர், அரசியல் கட்சி தொண்டரால் தேர்தலில் களமிறங்க முடியாது. இது வெட்கக்கேடான விஷயம்.
இன்று ஜாதி, மதத்தின் அடிப்படையில் அரசியல் நடக்கிறது. எனவே, மக்கள் நன்றாக சிந்தித்து, வளர்ச்சிக்காக செயல்படும் கட்சி மற்றும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.
நாட்டில் நடக்கும் ஊழல் குறையவில்லை. மக்கள் இனியும் சிந்திக்காவிட்டால், வரும் நாட்கள் நம்மை இருள் சூழும்.
ஆட்சியில் எந்த கட்சி இருந்தாலும் ஊழல் நடக்கிறது. ஊழலில், நாட்டிலேயே கர்நாடகா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
ஊழல் பரவலாக இருப்பதால், வளர்ச்சி பணிகள் தரமாக இருப்பது இல்லை. 50 - 60 ஆண்டுகள் இருக்க வேண்டிய அரசு கட்டடங்கள், 10 ஆண்டுகளிலேயே விழுந்து விடுகின்றன.
பெருமளவில் ஊழல் நடக்கும் நிலையில், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை எப்படி சரி செய்வது? மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருப்பரோ, அதன்படியே அதிகாரிகளும் இருப்பர்.
முதல்வர் என்ன கருத்து கூறியிருந்தாலும், ஊழல் விஷயத்தில் என் கருத்தில் மாற்றம் இல்லை. மக்கள் பிரதிநிதிகளை போன்று, அதிகாரிகளும் ஊழல்வாதிகள் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிருப்தி
பசவராஜ் ராயரெட்டி, அரசு மீது அதிருப்தி தெரிவிப்பது, இது முதல் முறை அல்ல. இதற்கு முன், காங்., அரசின் வாக்குறுதி திட்டங்கள் குறித்தும் ஆட்சேபம் தெரிவித்தார்.
'இலவச திட்டங்களால், மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்குவதில்லை. வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன' என பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.