விசா ஊழல் வழக்கு : கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை
விசா ஊழல் வழக்கு : கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை
ADDED : அக் 18, 2024 02:52 AM

புதுடில்லி
பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில், 1,980 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையத்தை அமைக்கும் பணியை, பஞ்சாபைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்., எனப்படும், 'தாலாவாண்டி சாபோ பவர்' என்ற நிறுவனம் செய்து வந்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல்., இந்த பணியை, ஷான்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இந்த பணிக்காக பஞ்சாப் வந்த சீன பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக விசா வழங்க, கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக 2022ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
கார்த்தியின் தந்தை சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்தார்.
இந்த வழக்கில், இரண்டு ஆண்டு விசாரணையை முடித்துள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், டி.எஸ்.பி.எல்., மற்றும் மும்பையை சேர்ந்த பெல் டூல்ஸ் நிறுவனம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ., குறிப்பிட்டு உள்ளதாவது:
அனல்மின் நிலையம் அமைக்கும் பணி, நிறைவடைய திட்டமிட்டதை விட அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனால், டி.எஸ்.பி.எல்., நிறுவனம் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.
இதை தவிர்ப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சீன பணியாளர்களை அழைத்து வர அந்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான விசாக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்கு, தன் தந்தை சிதம்பரத்தின் உதவியை கார்த்தி பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.