கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
UPDATED : டிச 29, 2025 10:26 AM
ADDED : டிச 29, 2025 10:23 AM

நமது டில்லி நிருபர்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.
விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றது. த.வெ.க., மாநில பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலர் மதி யழகன் ஆகியோருக்கு, விசாரணைக்கு இன்று ஆஜர் ஆகுமாறு சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
அதன்படி, இன்று (டிசம்பர் 29) ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த விசாரணை இன்று முழுவதும் நடக்கும் என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

