காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்துக்கு... தடை! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்துக்கு... தடை! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி
ADDED : ஜன 01, 2024 03:49 AM

புதுடில்லி : பயங்கரவாதத்தை ஊக்குவித்து, நம் நாட்டுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்டு வந்த தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்புக்கு மத்திய அரசு நேற்று ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆதரவு பிரிவினைவாத இயக்கமான தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்பு, ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்டு வந்தது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்தது.
அது தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டு அங்குள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை பயங்கரவாத செயல்களிலும் இந்த அமைப்பு ஈடுபடுத்தியது.
நடவடிக்கை
இதையடுத்து, இந்த அமைப்பின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்புக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீரின் தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்பு சட்ட விரோதமானது என அறிவிக்கப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீரை நம் நாட்டில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை அங்கு நிறுவும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டது.
அது மட்டுமின்றி நம் நாட்டுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து, பிரிவினைவாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
அங்கு நடந்த பயங்கரவாத செயல்களில் இந்த அமைப்புக்கு பல விதங்களில் தொடர்புள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம்.
எந்தவொரு தனி நபரோ அல்லது அமைப்போ நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது உடனடியாக முறியடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்பின் நோக்கமே, ஜம்மு - காஷ்மீரை நம் நாட்டில் இருந்து பிரிப்பதே.
அங்கு, பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது, நம் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தான் அமைப்புகளுடன் சேர்ந்து நம் நாட்டுக்கு எதிராக நிதி திரட்டுவது, நம் வீரர்களால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்துவது என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டது.
பாகிஸ்தான் ஆதரவு
அதுமட்டுமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் விதமாகவும் தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு, அரசிதழிலும் நேற்று வெளியிடப்பட்டது.
பாகிஸ்தான் ஆதரவாளரும், காஷ்மீரி ஜிகாதி குழுக்களின் தலைவராகவும் கருதப்படும் சையத் அலி ஷா கிலானியால், தெஹ்ரீக் - இ - ஹுரியத் அமைப்பு 2004ல் துவங்கப்பட்டது.
இவர் ஜமாத் - இ - இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் இருந்து விலகியதை அடுத்து, இந்த அமைப்பை துவக்கினார். சையத் அலி ஷா கிலானியின் மறைவுக்குப் பின், அந்த அமைப்பின் தலைவராக மசரத் ஆலம் பட் பொறுப்பேற்றார்.
பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபட்ட, பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பும் கடந்த 2022ல் மத்திய அரசால் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது.