அதிரடி: காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை!: யாசின் மாலிக் அமைப்புக்கும் கிடுக்கிப்பிடி
அதிரடி: காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு தடை!: யாசின் மாலிக் அமைப்புக்கும் கிடுக்கிப்பிடி
UPDATED : மார் 17, 2024 11:42 AM
ADDED : மார் 16, 2024 11:35 PM

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாதத்தை துாண்டி விட்ட நான்கு அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் அமைப்பிற்கான தடை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத ஹூரியத் மாநாடு அமைப்பின் முன்னணி தலைவரான யாசின் மாலிக், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை
அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இவரது ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு கடந்த 2019ல் மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், இந்த தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:
யாசின் மாலிக்கின் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பு, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை துாண்டும் செயல்களை அங்கு தொடர்ந்து செய்து வருகிறது.
தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், இந்த அமைப்புக்கான தடையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளது.
அதேபோல், பிரிவினைவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் லீக் அமைப்புக்கான சொந்தமான நான்கு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவால்
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மத்திய அரசின் பிடியிலிருந்து தப்ப முடியாது.
தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் எவரும் கடுமையான சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
முகமது பரூக் ஷா தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் மக்கள் லீக் என்ற அமைப்பு, நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாதத்தை துாண்டும் வகையில் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் நாட்டிற்கு எதிரான பிரசாரத்தில் இதன் உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அந்த அமைப்பைச் சார்ந்த அனைத்து துணை அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சம் தடை விதித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

