ADDED : செப் 25, 2024 09:21 PM

ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளியில் இருந்து 16 கி.மீ., தொலைவில், 5,000 மீட்டர் உயரத்தில் மலை மீது காவலேதுர்கா கோட்டை அமைந்துள்ளது. இதை புவனகிரி என்றும் அழைக்கின்றனர்.
வரலாறு
இந்த கோட்டை, ஒன்பதாம் நுாற்றாண்டில் நாயகா ராஜ வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்டது. 14வது நுாற்றாண்டில் கேலடி ராஜாவான வெங்கடப்பா நாயகா ஆட்சிக்காலத்தில், பல அடுக்கு பாதுகாப்புடன் கூடிய கோட்டையாக மாற்றினார்.
இந்த கோடைக்குள், அரண்மனை, கோவில்கள், மடம், தானிய களஞ்சியம், கருவூலம், தொழுவங்கள், குளங்கள் ஆகிய வசதிகளை அவர் ஏற்படுத்தினார். அரண்மனைக்குச் செல்லும் பாதை, யானைகளும் செல்லும் வகையில் அகலமான கற்களால் அமைக்கப்பட்டன.
அதன்பின், 18ம் நுாற்றாண்டில், ஹைதர் அலியும், அவரை தொடர்ந்து திப்பு சுல்தானும் ஆட்சி செய்தனர். தொடர்ந்து பல போர்களை சந்தித்துள்ள இந்த கோட்டை, சுற்றுலா பயணியருக்கு, குறிப்பாக டிரெக்கிங் செல்பவர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
என்ன சிறப்பு
இந்த மலையில் இருந்தபடி 360 டிகிரி கோணத்தில், மலையை சுற்றி உள்ள பகுதிகளை காணலாம்.
ஹொய்சாளா, விஜயநகர காலத்திய வடிவமைப்பில் கோட்டை கட்டப்பட்டு உள்ளது. கோடைக்குள் அமைந்துள்ள பசவண்ணா கோவில், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு தொன்மை கதைகளை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. தியானம் செய்வதற்கான சிறந்த இடம். சூரியன் உதயம், மறைவை இங்கிருந்து பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.
அடர்ந்த காடுகள், பாறைகள் நிறைந்த பாதையில் நடந்து செல்வது சாகச அனுபமாக இருக்கும். நீரோடைகள், பல வகையான தாவரங்கள், விலங்குகள் உட்பட வசீகரிக்கும் இயற்கை அழகு, மலையேற்றத்தின் அழகை கூட்டுகிறது.
வன விலங்கு ஆர்வலர்கள், பறவைகள் ஆவர்களின் சொர்க்கமாக விளங்குகிறது. யானைகள், சிறுத்தைகள், சாம்பார் மான்கள், பல்வேறு வகையான பறவைகள் வசிக்கின்றன.
26_Article_0001, 26_Article_0002, 26_Article_0003, 26_Article_0004
பல போர்களை கண்ட காவலேதுர்கா கோட்டை. (2வது படம்) கோட்டைக்கு செல்லும் பாதை. (3வது படம்) கோட்டைக்குள் அமைந்துள்ள குளம். (கடைசி படம்) பசவண்ணா கோவில்.
- நமது நிருபர் -