டாக்டர் மருந்துச்சீட்டு இனி கன்னடத்தில் தான் இருக்கணும்; தடாலடி கோரிக்கையால் அரசுக்கு நெருக்கடி
டாக்டர் மருந்துச்சீட்டு இனி கன்னடத்தில் தான் இருக்கணும்; தடாலடி கோரிக்கையால் அரசுக்கு நெருக்கடி
ADDED : செப் 10, 2024 11:57 AM

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மருத்துவர்கள் கன்னட மொழியில் மருந்துச்சீட்டு எழுதி தர வேண்டும் என உத்தரவிடுமாறு மாநில அரசுக்கு கன்னட வளர்ச்சிக் கழகம் கடிதம் எழுதி உள்ளது.
முக்கிய கோரிக்கை
கர்நாடகாவில் கன்னடத்துக்கு அம்மாநில மக்களும், அரசும் அளித்து வரும் முக்கியத்துவம் பலரும் அறிந்த ஒன்று. அதில் லேட்டஸ்ட்டாக முக்கிய கோரிக்கை ஒன்று வலுப்பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் அனைவரும் இனிமேல் தங்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டுகளில் கன்னட மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதே. முழுமையாக சொல்ல வேண்டுமானால் மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை.
கடிதம்
இந்த முக்கிய கோரிக்கையை அம்மாநில கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில அரசுக்கு முன் வைத்துள்ளது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறது. கன்னட வளர்ச்சிக் கழக தலைவர் புருஷோத்தம பிலிமாலே கூறியதாவது;
மொழிக்கு முக்கியத்துவம்
தாலுகா, மாவட்டம் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அதற்காக மருந்துச்சீட்டுகளில் கன்னட மொழிகளில் மருந்துகளின் பெயர்களை எழுத முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எளிதில் புரியும்
கன்னட மொழியை பெருமைப்படுத்தும் விதத்திலும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் இந்த நடவடிக்கை அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த தடாலடி கோரிக்கையால், அரசுக்கு நெருக்கடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மருந்துச்சீட்டு
கன்னட மொழியில் மருந்துச்சீட்டுகள் என்ற கோரிக்கை குறித்து வேறு ஒரு கருத்துருவாக்கத்தையும் நடுநிலையாளர்கள் முன் வைக்கின்றனர். மருந்துகளின் அட்டைகள், டானிக் பாட்டில்கள் என அனைத்திலும் ஆங்கிலம் தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆங்கில மொழியில் தான் மருந்துகள் பெயர் அச்சிடப்பட்டு உள்ளன.
யார் பொறுப்பு?
அப்படி இருக்கும் போது மருந்துச்சீட்டில் கன்னட மொழியில் எழுதி என்ன பயன்? கன்னடத்தில் மருந்துச்சீட்டு, ஆங்கில எழுத்துகளில் மருந்துகள் எனும் போது யாரேனும் புரியாமல் மருந்தை மாற்றிக் கொடுத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை அவர்கள் முன் வைக்கின்றனர்.