மேல்படிப்புக்கு ஐ.ஐ.டி., செல்லும் கேதார்நாத் கழுதை சவாரி தொழிலாளி
மேல்படிப்புக்கு ஐ.ஐ.டி., செல்லும் கேதார்நாத் கழுதை சவாரி தொழிலாளி
ADDED : ஜூலை 22, 2025 03:52 AM

காடுகள், மலைகள் நிறைந்த உத்தரகண்ட், சுற்றுலா பயணியரின் சொர்க்க பூமியாக திகழ்கி றது. குதிரை மற்றும் கழுதை சவாரி வாயிலாக சுற்றுலா பயணியர் இங்கு பயணிப்பது வாடிக்கை.
கரடுமுரடான பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாததால், சுற்றுலா பயணியர் இந்த கோவேறு கழுதை சவாரியையே நம்பி உள்ளனர்.
வறுமை குறிப்பாக, புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு செல்வதற்கு, கோவேறு கழுதை சவாரி உரிமையாளர்களின் உதவிகள் நிச்சயம் தேவை. மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் காலங்கள் தான், இந்த கழுதை சவாரி தொழிலாளர்களுக்கு பொற்காலம்.
கவுரிகுண்ட் பகுதியில் இருந்து கேதார்நாத் கோவில் வரையிலான 17 கி.மீ., நீள கரடு முரடான பாதையில், இவர்களை பார்க்காதவர்களே இருக்க முடியாது.
சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த தொழிலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான 21 வயது நிரம்பிய அதுல் குமார், தன் மேல்படிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி.,யில் தேர்வாகிஉள்ளார்.
இங்கு, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரோன் தேவால் கிராமத்தைச் சேர்ந்த அதுல் குமாரின் தந்தையும், ஒரு காலத்தில் கழுதை சவாரி தொழிலில் இருந்துள்ளார். அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த பொறுப்பு அதுல் மற்றும் தம்பி அமன் மீது சிறு வயதிலேயே விழுந்தது.
கேதார்நாத் கோவிலுக்கான சீசன் முடிந்ததும், உள்ளூர் திரும்பும் சகோதரர்கள், ஆற்றுப்படுகையில் இருந்து மண் அள்ளிச் செல்லும் பணியையும், உள்ளூர் வேலைகளையும் தங்கள் கழுதைகளுடன் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
வறுமையின் பிடியில் இருந்தாலும், உத்தரகண்ட் பல்கலையில் பி.எஸ்.சி., பட்டப்படிப்பை நிறைவு செய்தார் அதுல்.
படிப்பின் மீது, அவருக்கு இருந்த ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள், மேல் படிப்புக்கு ஐ.ஐ.டி.,யில் சேர அதுலை ஊக்குவித்தனர். ஒருபுறம் கழுதை சவாரி தொழில், மறுபுறம் படிப்பு என உழைத்த அதுல், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான ஜே.ஏ.எம்., எனப்படும் முதுகலை படிப்பிற்கான கூட்டு நுழைவுத் தேர்வுக்கு தயாரானார்.
கணிதம் இதற்காக, 'ஆன்லைன்' பயிற்சியும் எடுத்தார். கடந்த பிப்ரவரியில், டேராடூனில் நடந்த தேர்வில் அவர் தேர்ச்சி அடைந்தார். சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.எஸ்.சி., கணிதம் படிக்க தேர்வாகி உள்ளார்.
இது குறித்து அதுல்குமார் கூறுகையில், “கேதார்நாத் பாதை எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்று. கடந்த சீசனில், தேர்வுக்கு படிக்க வேண்டும் என்பதால், 10 நாட்கள் மட்டுமே கழுதை சவாரி தொழிலுக்கு சென்றேன்,” என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -