கேதார்நாத்தில் நடை திறப்பு: 12,000 பக்தர்கள் தரிசனம்
கேதார்நாத்தில் நடை திறப்பு: 12,000 பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 02, 2025 11:58 PM

கேதார்நாத்: உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோவிலின் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உட்பட 12,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இவற்றுக்கு செல்லும் ஆன்மிக யாத்திரை 'சார்தாம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த நான்கு கோவில்கள், சார்தாம் யாத்திரைக்காக கோடைக்காலத்தில் திறக்கப்படும். கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. பத்ரிநாத் கோவில் நாளை திறக்கப்பட உள்ளது.
கேதார்நாத் கோவில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது. சிவன் மூலவராக உள்ள இந்த கோவில், 11வது ஜோதிர்லிங்கம் என்ற சிறப்பையும் பெற்றது.
நடை திறப்பு நிகழ்ச்சிக்காக கோவில் முழுதும் ரோஜா, சாமந்தி உட்பட 54 வகைகளைச் சேர்ந்த, 11,000 கிலோ மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் நபராக பூஜை செய்தார். அதன் பின் நேற்று ஒரே நாளில், 12,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு கேதார்நாத்தில் மந்தாகினி மற்றும் சரஸ்வதி நதிகள் இணையும் பகுதியில் ஆரத்தி நிகழ்ச்சி நடத்தவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.