ADDED : நவ 11, 2026 09:42 PM
ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள், சார்தாம் என அழைக்கப்படுகின்றன. இங்கு குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். இதையடுத்து, 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவில் நடை இன்று (நவ.,11) அடைக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலை வலம் வந்தது. பின், சிவனின் குளிர்கால இருப்பிடமான உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் 19.13 லட்சம் பக்தர்கள் கேதார்நாத்தில் தரிசனம் செய்துள்ளனர்.
இதேபோல், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனா தேவி கோவிலான யமுனோத்ரி கோவில் நடையும் குளிர்காலத்தையொட்டி இன்று காலை அடைக்கப்பட்டது. இதையடுத்து யமுனாதேவி உற்சவர் சிலை, குளிர்கால இருப்பிடமான கர்சாலி கிராமத்திற்கு பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. யாத்திரை காலத்தில் யமுனோத்ரிக்கு 8.84 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
