டில்லியில் மகளிருக்கு நிதியுதவி திட்டம்; அறிவித்தார் கெஜ்ரிவால்
டில்லியில் மகளிருக்கு நிதியுதவி திட்டம்; அறிவித்தார் கெஜ்ரிவால்
ADDED : டிச 12, 2024 10:15 PM

புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால் இத்தொகை இருமடங்கு ஆக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆன கெஜ்ரிவால் சட்டசபை தேர்தலில் பல இலவச திட்டங்களை அறிவித்து வருகிறார். பஞ்சாப் தேர்தலின் போது, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக்கூறினார். ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை என பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: பெண்களுக்காக இரண்டு திட்டங்களை அறிவிக்க உள்ளேன். முன்பு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக்கூறியிருந்தேன். இத்திட்டத்திற்கு முதல்வர் அதிஷி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் டில்லியில் அமல்படுத்தப்படும்.
ஆனால், அடுத்த 10 - 15 நாட்களில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால், பெண்கள் வங்கிக்கணக்கில் இத்தொகை செலுத்துவது சாத்தியம் இல்லை.பணவீக்கம் மற்றும் விலைவாசி காரணமாக இத்தொகை போதாது. பிப்., மாதம் நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், இத்தொகை ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். இதற்கான பதிவு நாளை முதல் துவங்கும். இத்திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அவர்களின் நிதிநிலையை மேம்படுத்தும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
இத்திட்டத்திற்காக டில்லி அரசின் பட்ஜெட்டில் ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அரசின் சலுகை பெறுபவர்கள் இத்திட்டத்தின்படி நிதியுதவி பெற முடியாது.
டில்லியை பொறுத்தவரை கவர்னர் சக்சேனாவிற்கு அதிகாரம் அதிகம். இதனால், இத்திட்டத்திற்கான நிதி எங்கிருந்து வரும் என விளக்கம் கேட்டு முட்டுக்கட்டை போட வாய்ப்பு உள்ளதால், இருவருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.