ADDED : நவ 30, 2024 11:41 PM

புதுடில்லி,: டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தண்ணீரை முகத்தில் வீசி மர்ம நபர் நேற்று தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. சட்டசபைக்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.
இதன்படி, தெற்கு டில்லியின் மாளவியா நகரில் நேற்று அவர் பாதயாத்திரை சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்களிடம் கைகுலுக்கி அவர் பேசினார்.
திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர், கெஜ்ரிவால் மீது திரவம் போன்ற ஒரு பொருளை வீசினார்.
போலீசார் மற்றும் பாதுகாவலர்கள், அந்த நபரைப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கெஜ்ரிவால் மீது வீசப்பட்டது தண்ணீர் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியில் வாக்குவாதத்தை உருவாக்கியுள்ளது.
''டில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. டில்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதில் எதுவும் செய்யவில்லை,'' என, ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றஞ்சாட்டினார்.
''தன் மீது செருப்பு எறிவது, மை எறிவது போன்ற நாடகங்களை கெஜ்ரிவால் ஏற்கனவே நடத்தியுள்ளார். தற்போது அதுபோன்ற ஒரு நாடகம் நடந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்காக அவர் தயாராகி வருகிறார்,'' என, டில்லி பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரவின் சங்கர் கபூர் கூறியுள்ளார்.