ஜாட் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதி பா.ஜ., மீது கெஜ்ரிவால் தாக்குதல்
ஜாட் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதி பா.ஜ., மீது கெஜ்ரிவால் தாக்குதல்
ADDED : ஜன 09, 2025 09:59 PM
விக்ரம் நகர்:ஜாட் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அளித்த வாக்குறுதியை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு மீறிவிட்டதாக, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2015ம் ஆண்டில், ஜாட் சமூகத் தலைவர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, டில்லியின் ஜாட் சமூகம் மத்திய ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்கப்படுமென, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019ம் ஆண்டிலும் இதை உறுதியை அளித்தார். இருப்பினும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். ஜாட் சமூகத்தை கடந்த பத்தாண்டுகளாக மத்திய அரசு தவறாக வழிநடத்தி வருகிறது.
ஜாட் சமூகத்திற்கு பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் மாணவர்கள், டில்லி பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் டில்லியைச் சேர்ந்த ஜாட் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மத்திய ஓ.பி.சி., பட்டியலில் டில்லியில் உள்ள ஜாட் சமூகம் இல்லாததால், டில்லியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் பல்கலையில் சேர முடியவில்லை.
மாநில பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டபோதிலும், மத்திய அரசு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மறுத்துவிட்டது. இது துரோகத்தைத் தவிர வேறில்லை.
வேலைகள் மற்றும் கல்லுாரி சேர்க்கை உட்பட மத்திய அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெறுவதை உறுதி செய்வதற்காக, ஜாட் சமூகத்தை ஓ.பி.சி., பட்டியலில் மத்திய அரசு சேர்க்க வேண்டும். அந்த சமூகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

