10 நாள் தியானத்தை முடித்தார் கெஜ்ரிவால் நாளை மறுநாள் டில்லி திரும்புகிறார்
10 நாள் தியானத்தை முடித்தார் கெஜ்ரிவால் நாளை மறுநாள் டில்லி திரும்புகிறார்
ADDED : மார் 15, 2025 09:37 PM
அமிர்தசரஸ்:ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் 10 நாள் 'விபாசனா' தியானப் பயிற்சி முகாம் முடிந்து, அமிர்தசரஸ் நகருக்கு நேற்று வந்தார்.
டில்லி சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., 48 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை முதல்வர் பதவி வகித்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்தனர். எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் ஆதிஷி சிங் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் அருகே உள்ள ஆனந்த்கர் கிராமத்தில் அமைந்துள 'தம்ம தாஜா விபாசனா' மையத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் இம்மாத முதல் வாரத்தில் வந்தார். அங்கு, 10 நாட்கள் தங்கியிருந்து தியானப் பயிற்சி செய்தார்.
பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில், அமிர்தசரஸ் நகருக்கு நேற்று வந்தார். முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் இந்தர்பிர் நிஜ்ஜார் வீட்டில் தங்கியுள்ள கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியின் மூன்றாண்டுகள் நிறைவு நாள் விழாவில் இன்று பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் பகவந்த் மானுடன் பொற்கோவில், துர்கியானா கோவில் மற்றும் வால்மீகி கோவில் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடு செய்கிறார்.
ஆம் ஆத்மி எம்.பி., டாக்டர் ராஜ் குமார், பஞ்சாப் அமைச்சர் டாக்டர் ரவ்ஜோத் சிங், எம்.எல்.ஏ.,க்கள் பிரேம் ஷங்கர் ஜிம்பா, ஜஸ்விர் சிங் ராஜா ஆகியோர் ஆனந்த்கர் தம்ம தாஜா விபாசனா மையத்துக்கு வந்து கெஜ்ரிவாலை வரவேற்றனர்.
முன்னதாக, கெஜ்ரிவால் மனைவி சுனிதா, நேற்று முன் தினம் இரவே ஆனந்த்கர் வந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். நேற்று காலை, கணவரை வரவேற்றார். இருவரும் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
நாளை வரை அமிர்தசரஸ் நகரில் தங்கியிருக்கும் கெஜ்ரிவால், நாளை மறுநாள் டில்லி திரும்புகிறார்.