கெஜ்ரிவாலுக்கு தோல்வி பயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் அதிரடி
கெஜ்ரிவாலுக்கு தோல்வி பயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் அதிரடி
ADDED : ஜன 09, 2025 10:03 PM
சவுத் அவென்யூ:“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பீதி அடைந்துள்ள அவர், ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்ததற்காக தோழமை கட்சிகள் மூலம் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்,” என, மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் குற்றஞ்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி எதிர்ப்பு நிலையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் பீதியடைந்துள்ளார். தன் தோழமை கட்சிகள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.
ஆனால் நாங்கள், அவரது கட்சியுடன் எந்த கூட்டணியையும் ஏற்படுத்தப் போவதில்லை.
நடக்க உள்ள டில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது குறித்து, 'இண்டியா' கூட்டணி கட்சிகளிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை இது வரை வரவில்லை.
கடந்த 11 ஆண்டுகளாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால், டில்லியின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை.
தலைநகரின் ஜாட் சமூகத்திற்கு இடஒதுக்கீடு பிரச்னையை எழுப்பியதும் அரசியல் தான்.
தன் தொகுதியும் ஆட்சியும் கை நழுவி விடுமோ என்ற அச்சத்தில் புது புது அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.
டில்லியில் நாங்கள் சுதந்திரமாக போட்டியிடுகிறோம். ஆம் ஆத்மி அரசாங்கத்தில் காணப்படும் எந்தவொரு குறைபாட்டையும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலைப்படுத்தும்.
டில்லி மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடும்.
தனக்கு எதிராக, வலுவான வேட்பாளராக சந்தீப் தீட்சித்தை காங்கிரஸ் நிறுத்தியுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் பதற்றமடைந்துள்ளார். சந்தீப் தீட்சித்தின் தாய் ஷீலா தீட்சித் மூன்று முறை டில்லியின் முதல்வராக இருந்தவர்.
டில்லி மக்கள், பா.ஜ.,வை விரும்பவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு இருந்தது. அதனால் ஆம் ஆத்மி முதலில் ஆட்சிக்கு வந்தது. அதேபோன்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸிடமிருந்து ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்ற ஓட்டு வங்கி, இப்போது மீண்டும் காங்கிரசுக்கு மாறி வருகிறது.
ஒரு வலுவான அரசாங்கத்தை காங்கிரஸ் அமைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். எந்த கூட்டணியும் இருக்காது. ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த கூட்டணியும் வைக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் டில்லி காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.