குற்றப் பத்திரிகையை எதிர்த்து ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
குற்றப் பத்திரிகையை எதிர்த்து ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
ADDED : நவ 20, 2024 10:35 PM
புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடுடன் தொடர்புள்ள பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நடவடிக்கையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டார். சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாறம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை கைது செய்தது.
தற்போது, உச்ச நீதிமன்ற ஜாமினில் இருக்கும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
முதல்வர் பதவியில் இருந்த என் மீது வழக்குத் தொடர எந்த அனுமதியும் பெறாத நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி என் மீதான குற்றப் பத்திரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வழக்கில் தனக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கு கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜூலை 12ம் தேதி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் செப். 13ம் தேதி ஜாமின் கிடைத்தது.