பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் பா.ஜ.,வுக்கு கெஜ்ரிவால் அழைப்பு
பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் பா.ஜ.,வுக்கு கெஜ்ரிவால் அழைப்பு
ADDED : ஜன 11, 2025 08:35 PM
புதுடில்லி,:“பா.ஜ., முதல்வர் வேட்பாளராக முன்னாள் எம்.பி., ரமேஷ் பிதுரியை தேர்வு செய்துள்ளது. அதை விரைவில் அறிவிப்பர். அவர் என்னுடன் பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்துக்கு வர சவால் விடுக்கிறேன்”என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால், நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ஜ., முதல்வர் வேட்பாளராக ரமேஷ் பிதுரியை அறிவிக்கப் போவதாக தகவல் கிடைத்து உள்ளது. பா.ஜ., முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் ஆம் ஆத்மியுடன் பகிரங்க விவாதம் நடத்த வர வேண்டும். இதை ஒரு சவாலாகவே பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஆதிஷி சிங் போட்டியிடும் கல்காஜி தொகுதியில் ரமேஷ் பிதுரியை பா.ஜ., களம் இறக்கியுள்ளது.
முதல்வர் ஆதிஷி, நிருபர்களிடம் நேற்று முன் தினம் பேசும்போது, “பா.ஜ., வேட்பாளரான ரமேஷ் பிதுரி, என் தந்தை குறித்து அவதூறாக பேசினார். அதேபோல், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கன்னங்களை வர்ணித்தும் சமீபத்தில் பேட்டியளித்தார்.
இதுபோன்று பெண்களை அவதூறு பேசும் ரமேஷ் பிதுரியைத்தான், டில்லி முதல்வர் வேட்பாளராக பா.ஜ., தேர்வு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது,”என, கூறியிருந்தார்.

