முதியோருக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: கெஜ்ரிவால் வாக்குறுதி
முதியோருக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: கெஜ்ரிவால் வாக்குறுதி
ADDED : டிச 19, 2024 02:58 AM

புதுடில்லி,
டில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வாக்குறுதி அளித்தார்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. டில்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஆளும் ஆம் ஆத்மி முன்னதாகவே 70 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து, பிரசார வேலைகளில் இறங்கிவிட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சஞ்சீவனி' திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும்.
சிகிச்சைக்கான செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் துவங்கும். ஆம் ஆத்மி கட்சியினர் உங்கள் வீட்டிற்கு வந்து பதிவு அட்டையை தருவர். அதை பாதுகாப்பாக வைத்திருங்கள். தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.