ADDED : மே 15, 2026 01:01 AM

பனாஜி: கோவிலுக்கு வந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் தொடர்பான கேள்வி களுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்று நாள் பயணமாக கோவா மாநிலத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். வடக்கு கோவா, சியோலிமில் உள்ள, ஸ்ரீ சுவாமி சமர்த் பரிவார் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
டில்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங், ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில தலைவர் வால்மீகி நாயக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த கெஜ்ரிவாலிடம், கோவா சட்டசபைக்கு, 2027ல் நடக்கவுள்ள தேர்தல் குறித்து,நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், “கோவிலில் அரசியல் பேச விரும்பவில்லை. கோவா மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன். இந்தக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது மனநிறைவாக இருந்தது,” என்றார்.
