ADDED : பிப் 17, 2024 02:15 AM

புதுடில்லி, பிப். 17-
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டது. இவற்றை அவர் நிராகரித்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவால் மறுப்பதாகக் கூறி, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் சட்ட சபையில் முதல்வர் கெஜ்ரிவால் நேற்று கூறுகையில், ''டில்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது பா.ஜ.,வுக்கு தெரியும். அதனால் தான், ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பல்வேறு யுக்திகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
''எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் கட்சி விலகவில்லை என்பதை காட்டுவதற்காக, நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானத்தை முன்வைக்கிறேன்,'' என்றார். இதையடுத்து இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.
மொத்தம், 70 எம்.எல்.ஏ.,க்கள் உடைய டில்லி சட்டசபையில், ஆளும் ஆம் ஆத்மிக்கு, 62; பா.ஜ.,வுக்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி பலத்தை நிரூபித்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த முடியாது.