'விலை உயர்ந்த மொபைல் போன்களை வாங்கி குவித்த கெஜ்ரிவால், சிசோடியா' டில்லி கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு
'விலை உயர்ந்த மொபைல் போன்களை வாங்கி குவித்த கெஜ்ரிவால், சிசோடியா' டில்லி கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 17, 2025 10:07 PM
புதுடில்லி,:'ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில், முதல்வராக இருந்த கெஜ்ரிவாலும், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும், விலை உயர்ந்த, அதி நவீன மொபைல் போன்களை வாங்கி குவித்தனர்,'' என, டில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லி கல்வி அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஆஷிஷ் சூட் நேற்று கூறியதாவது:
டில்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி காலத்தின் போது ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. கடந்த, 2013ல் டில்லி அரசின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, முதல்வராக இருப்பவர், 50,000 ரூபாய்; அமைச்சராக பதவி வகிப்பவர், 45,000 ரூபாய்க்கும் மொபைல் போன் வாங்கலாம்.
ஆனால், முதல்வராக இருந்த கெஜ்ரிவால், 2015 - 22 காலத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதி நவீன மொபைல் போன்களை வாங்கியுள்ளார். இதுபோல், மொத்தம் நான்கு மொபைல் போன்களை அவர் வாங்கியுள்ளார்.
துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும், மிகவும் விலை உயர்ந்த ஐந்து மொபைல் போன்களை வாங்கியுள்ளார். கெஜ்ரிவாலுக்கு பின் முதல்வராக பதவி வகித்த ஆம் ஆத்மியின் ஆதிஷியும், அதிக விலை உடைய, 'ஐபோன்' வாங்கியுள்ளார். சாதாரண மக்களின் காவலனாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.