பஞ்சாப் வந்த கெஜ்ரிவாலுக்கு அரசர் என நினைப்பு: காங்கிரஸ், பாஜ., விமர்சனம்
பஞ்சாப் வந்த கெஜ்ரிவாலுக்கு அரசர் என நினைப்பு: காங்கிரஸ், பாஜ., விமர்சனம்
ADDED : மார் 05, 2025 09:05 PM

சண்டிகர்: பஞ்சாபில், கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பு, அவரது காருக்கு பின்னால் சென்ற சொகுசு கார்கள், ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள் சென்றதற்கு பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் தோல்வியைச் சந்தித்தனர். இந்தத் தோல்விக்கு பிறகு, கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வர் ஆவார். ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவார் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறின. ஆனால், ஆம் ஆத்மி இதனை மறுத்து உள்ளது.
இந்நிலையில், பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள தியான மையத்திற்கு கெஜ்ரிவால் அவரது மனைவியுடன் வந்தார். அவர் பயணித்த காருக்கு பின்னால், ஏராளமான சொகுசு கார்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் சென்றன. இதனுடன் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் அவர் 10 நாட்கள் தங்க உள்ளார். இதற்கு பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக டில்லி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மஞ்சிதர் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாகன்ஆர் வாகனத்தில் பயணித்து தன்னை சாமானிய மனிதனாக காட்டிக் கொண்ட கெஜ்ரிவால், தற்போது குண்டு துளைக்காத சொகுசு காரில் பயணிப்பதுடன், பஞ்சாப் கமாண்டோக்கள், ஜாமர்கள், ஆம்புலன்சுகள் என தியான மையத்திற்கு ஒரு விஐபி மஹாராஜா போல் சென்றுள்ளார். பஞ்சாப் முதல்வர் காரில் இல்லாத நிலையில், தியான மையத்திற்கு செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவாலுக்கு அதிகாரத்தை விரும்புகிறார். அவர் ஆடம்பரத்தில் மூழ்கி உள்ளார். தன்னை இன்னும் பேரரசர் மற்றும் அரசர் என்ற மாயையுடன் கெஜ்ரிவால் உள்ளதாக நான் கூறுவேன். டில்லி தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும் அவர இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.