புதுடில்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட மாட்டார் பா.ஜ., முன்னாள் எம்.பி., திட்டவட்டம்
புதுடில்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட மாட்டார் பா.ஜ., முன்னாள் எம்.பி., திட்டவட்டம்
ADDED : டிச 28, 2024 09:04 PM
புதுடில்லி:“பிப்ரவரியில் நடக்கும் தேர்தலில், புதுடில்லி சட்டசபைத் தொகுதியில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட மாட்டார்,” என, பா.ஜ., முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மா கூறினார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மேற்கு டில்லி லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி.,யுமான பர்வேஷ் வர்மா, நிருபர்களிடம் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிப்ரவரியில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் புதுடில்லி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
ஆனால், புதுடில்லி தொகுதி எம்.எல்.ஏ.,வாக 2013ல் இருந்து பதவி வகிக்கும் கெஜ்ரிவால், இம்முறை புதுடில்லி தொகுதியில் போட்டியிட மாட்டார். அவர் வேறு தொகுதிக்கு மாறி விடுவார்.
புதுடில்லி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட தயாராகுமாறு பா.ஜ., தலைமை என்னிடம் கூறியுள்ளது. அதனால், அரவிந்த் கெஜ்ரிவால் தன் தொகுதியை மாற்றுவது குறித்து ஆலோசிக்கும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த நேரத்தில், கெஜ்ரிவாலுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். புதுடில்லி தொகுதியில் இருந்து ஓடிவிடக்கூடாது. ஜனநாயக கண்ணியத்துடன் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி சட்டசபைத் தொகுதியில், பெண்களுக்கு தலா 1,100 ரூபாய் வர்மா கடந்த வாரம் வழங்கினார். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக, ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், அமலாக்கத் துறையில் புகார் மனு கொடுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வர்மா, “என் தந்தை சாஹிப் சிங் வர்மா துவக்கிய 'ராஷ்ட்ரிய ஸ்வாபிமான்' என்ற அறக்கட்டளை ஆதரவற்ற பெண்களுக்கு நிதியுதவி செய்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும் வரை உதவி செய்வேன்,” என்றார்.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மிக்கும், ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரத்தில், பா.ஜ., வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், மூன்று முறை டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித், புதுடில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.