டில்லியில் மீண்டும் தீவிரமடையும் கெஜ்ரிவால் சொகுசு பங்களா விவகாரம்
டில்லியில் மீண்டும் தீவிரமடையும் கெஜ்ரிவால் சொகுசு பங்களா விவகாரம்
ADDED : டிச 11, 2024 02:52 AM

புதுடில்லி:டில்லியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே, அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா தொடர்பாக மீண்டும் வார்த்தை மோதல் துவங்கி உள்ளது.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, வரும் பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர் பதவியை கடந்த செப்டம்பரில் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக அக்கட்சியின் ஆதிஷி பதவியேற்றார்.
முதல்வராக பதவி வகித்த போது, சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்தார். இந்த பங்களாவில், 45 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைப்பு பணிகளை அவர் மேற்கொண்டதாக, துவக்கத்தில் இருந்தே பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து சி.பி.ஐ.,யும் விசாரித்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா விவகாரம் தொடர்பாக, ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே மீண்டும் வார்த்தை மோதல் துவங்கி உள்ளது.
சொகுசு பங்களாவில் உள்ள வசதிகள் தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில், டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று வெளியிட்டார். அதில், பங்களாவுக்குள் உடற்பயிற்சி கூடம், நவீன கழிப்பறை, மார்பிள் கிரானைட் விளக்குகள் போன்றவை உள்ளன.
மக்களின் வரிப்பணம்
இது குறித்து வீரேந்திர சச்தேவா கூறியதாவது:
தன்னை சாதாரண நபராக காட்டிக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், ஏழு நட்சத்திர கண்ணாடி மாளிகையில் வசித்து வருகிறார் என, துவக்கம் முதலே தெரிவித்து வருகிறோம். தற்போது அது நிரூபணமாகி உள்ளது.
பல கோடி ரூபாய் செலவிட்டு, பங்களாவில் பல்வேறு வசதிகளை கெஜ்ரிவால் செய்துள்ளார். அரசு வீடு, கார், பாதுகாப்பு வேண்டாம் என பொய் சத்தியம் செய்பவர்கள், மக்களின் வரிப்பணத்தை எப்படி கொள்ளை அடிக்கின்றனர் பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், “உத்தர பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில், பள்ளிகள், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
''இதற்காக மக்கள் போராடுகின்றனர். இதை பற்றி கேள்வி கேட்பதற்கு பதில், அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்களா பற்றி பா.ஜ.,வினர் பேசுகின்றனர்,” என்றார்.