உயர்த்திய குடிநீர் கட்டணம் தள்ளுபடி கெஜ்ரிவாலின் அடுத்த வாக்குறுதி
உயர்த்திய குடிநீர் கட்டணம் தள்ளுபடி கெஜ்ரிவாலின் அடுத்த வாக்குறுதி
ADDED : ஜன 04, 2025 10:21 PM
புதுடில்லி:“சட்டசபைத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், சமீபத்தில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்,”என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
டில்லி சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தினமும் ஒரு வாக்குறுதியை அறிவித்து வருகிறது.
டில்லியில் நிருபர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
கடந்த ஆண்டு நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, டில்லி ஜல் போர்டு
குடிநீர் கட்டணத்தை உயர்த்தியது. இதனால், டில்லி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
உயர்த்தப்பட்ட கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டாம். இதை ஏற்கனவே ஒரு முறை கூறியுள்ளேன்.
இப்போது அதிகாரபூர்வமாகவே அறிவிக்கிறேன். தேர்தலில் வென்று ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
டில்லி அரசு மாதத்துக்கு 20,000 லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்குகிறது. இதனால், டில்லியில் வசிக்கும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மொத்தம் 70 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ., முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டு, மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆம் ஆத்மி - பா.ஜ., கடும் போட்டி நிலவும் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிட முடிவு செய்து, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது.