சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்த கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்த கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
ADDED : ஆக 05, 2024 06:03 PM

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் கேட்டு, விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பிறகு சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்தனர். அமலாக்கத்துறை வழக்கில், அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சி.பி.ஐ., கைது செய்ததால் அவர் வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில், சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கேட்டும் டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., கைதுக்கு நியாயமான காரணம் இல்லை எனக்கூற முடியாது என்றும், ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டு, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.