நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி மத்திய அரசு மீது பாய்ச்சல்
நம்பிக்கை ஓட்டெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி மத்திய அரசு மீது பாய்ச்சல்
ADDED : பிப் 18, 2024 01:10 AM

புதுடில்லி,டில்லி சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது.
டில்லியில், ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, பா.ஜ., சதித் திட்டம் தீட்டி வருவதாக, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.
தங்கள் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ., தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தால், 25 கோடி ரூபாய் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் மேலும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் இதை, எதிர்க்கட்சியான பா.ஜ., திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே, டில்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், டில்லி சட்டபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்தை, முதல்வர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், ஆளும் ஆம் ஆத்மிக்கு 62; பா.ஜ.,வுக்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று, டில்லி சட்டசபையில் கெஜ்ரிவால் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, ஆம் ஆத்மியின் 54 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே சட்டசபையில் இருந்தனர்.
உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், சிலர் பங்கேற்கவில்லை. 54 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததை அடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றி பெற்றது.
முன்னதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபையில் பேசியதாவது:
பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய சவாலாக, ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ., எங்களை அழிக்கப் பார்க்கிறது. அதனால் தான், ஆம் ஆத்மி மீது அனைத்து மூலைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதையெல்லாம் கண்டு எங்களுக்கு பயமில்லை. வரும் லோக்சபா தேர்தலில், ஒருவேளை பா.ஜ., வெற்றி பெற்றாலும், 2029 தேர்தலில், அக்கட்சியிடம் இருந்து நாட்டை ஆம் ஆத்மி காப்பாற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.