ADDED : ஜன 21, 2024 12:28 AM
தேவனஹள்ளி : ங்களூரு விமான நிலையத்தில் 26 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் சிக்கியது. டில்லிக்கு கடத்த முயன்ற, கென்யா பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு விமான நிலையத்தின் 1வது முனையத்தில் இருந்து, டில்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் செல்ல இருந்த, பயணியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது ஒரு பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.
அவர் வைத்திருந்த சூட்கேசில் சோதனை செய்தபோது, எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து சூட்கேஸை பிரித்து பார்த்தபோது, சூட்கேசுக்குள் வைத்து தைக்கப்பட்டு இருந்த, இரண்டு சிறிய பைகள் மீட்கப்பட்டன.
அந்த பைகளுக்கு பவுடர் இருந்தது. அந்த பவுடரை சோதனைக்கு அனுப்பியபோது, அது கோகைன் என்பது தெரிந்தது. 2.600 கிலோ எடையில் இருந்தது.
அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட, கோகைன் மதிப்பு சர்வதேச சந்தையில் 26 கோடி ரூபாய். கோகைன் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யாவை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுற்றுலா விசாவில், இந்தியா வந்துள்ளார்.
மும்பையில் வசித்தவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூரு வந்து தங்கியதும், பெங்களூரில் இருந்து டில்லிக்கு, கோகைன் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. அவரது பெயர், மற்ற விபரங்கள் வெளியாகவில்லை.

