மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது:சத்தீஸ்கர் பா.ஜ., அரசுக்கு கேரள பா.ஜ., கண்டனம்
மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது:சத்தீஸ்கர் பா.ஜ., அரசுக்கு கேரள பா.ஜ., கண்டனம்
ADDED : ஜூலை 30, 2025 09:53 AM
திருவனந்தபுரம்: சத்தீஸ்கரில் மூன்று பெண்களை மதம் மாற்றியதாக கூறி, இரு கேரள கன்னியாஸ்திரிகளை கைது செய்ததற்கு, கேரள மாநில பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், துர்க் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த கேரளாவின் ப்ரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் என்ற இரு கன்னியாஸ்திரிகள் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
நாராயண்பூரை சேர்ந்த மூன்று பெண்களை அவர்கள் மதமாற்றம் செய்ய முயன்றதாக பஜ்ரங் தள அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குவதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, சத்தீஸ்கர் அரசிடம் பேச்சு நடத்தி, இரு கன்னியாஸ்திரிகளையும் விடுவிக்கும் முயற்சிகளில் பா.ஜ.,வும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் களமிறங்கியுள்ளது.
இதற்காக இரு கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளனர். இதில் அனுப் அந்தோணி தலைமையிலான பா.ஜ., பிரதிநிதிகள் குழு, சத்தீஸ்கரின் துணை முதல்வர் விஜய் சர்மாவை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று பேசியது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இக்குழு, 'நீதி தவறாத வகையில், இந்த விவகாரத்தை அணுகுவதாக சத்தீஸ்கர் அரசு உறுதியளித்திருக்கிறது. எனவே விரைவில் அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காணும்,'' என தெரிவித்தனர்.
இதற்கிடையே காங்., எம்.பி., பென்னி, ஆர்.எஸ்.பி., எம்.பி., பிரேமசந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி பிரதிநிதிகள் குழு, துர்க் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரிகளை சந்தித்தது.