தேவசம்போர்டுகளை கலைக்க வேண்டும்: கேரள பாஜ வலியுறுத்தல்
தேவசம்போர்டுகளை கலைக்க வேண்டும்: கேரள பாஜ வலியுறுத்தல்
ADDED : பிப் 19, 2026 04:20 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தேவசம் போர்டுகள் அனைத்தையும் கலைக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜ பொதுச்செயலாளர் ஷோபா சுரேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார்களுக்கு மத்தியில், ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிராக பாஜ இந்தத் தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரளாவில் உள்ள சுமார் 1252-க்கும் மேற்பட்ட கோயில்களை, குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயில், நிர்வகிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். 1950-ல் நிறுவப்பட்ட இந்த வாரியம், கோயில்களின் நிர்வாகம், பக்தர்கள் வசதிகள் மற்றும் திருவிழாக்களை நிர்வகிக்கிறது. இது தவிர குருவாயூர் தேவசம் போர்டு மற்றும் கொச்சி தேவசம் போர்டுகளும் உள்ளன.
ஏற்கனவே, 2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜ ஆட்சிக்கு வந்தால் தேவசம் போர்டுகளைக் கலைத்துவிட்டு கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடமே ஒப்படைப்போம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைமை (ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கே. சுரேந்திரன்) முன்னரே வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ஷோபா சுரேந்திரன் பேசியதாவது:கேரளாவில் உள்ள அனைத்து தேவசம் போர்டுகளையும் கலைக்க வேண்டும்.குறிப்பாக, சபரிமலை தேவசம் போர்டை கண்டிப்பாகக் கலைக்க வேண்டும்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டைக் கலைத்துவிட்டு, நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.
ஷோபா சுரேந்திரன் கூறியது கேரள அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

