கேரளாவில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 பேர் பலி! காரும், அரசு பஸ்சும் மோதியதில் பயங்கரம்
கேரளாவில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 5 பேர் பலி! காரும், அரசு பஸ்சும் மோதியதில் பயங்கரம்
ADDED : டிச 03, 2024 06:49 AM

ஆலப்புழா; கேரளாவில் காரும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் உடல்நசுங்கி பலியாகினர்.
இது பற்றிய விவரம் வருமாறு;
கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பயிலும் சிலர் கார் ஒன்றில் சென்று கொண்டு இருந்தனர். காலர்கோடு பகுதியில் அவர்கள் கார் வந்தபோது அந்த கோரம் அரங்கேறியது. அதே ரோட்டில் எதிரே வந்த அரசு பஸ்சும், இவர்கள் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 5 பேர் காருக்குள்ளே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஊர் மக்களின் உதவியுடன் காரில் இருந்த சடலங்களை அவர்கள் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது;
காரில் எத்தனை பேர் பயணித்தனர் என்பது தெரியவில்லை. 5 பேர் பலியாகிவிட, அவர்களின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அனைவரும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என்பது மட்டும் தெரிந்துள்ளது.
5 சடலங்களுடன் காரில் இருந்த சிலரும் மீட்கப்பட்டு உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பஸ்சில் பயணித்தவர்களில் சிலரும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.