சனாதன தர்மம் குறித்த கருத்து கேரள முதல்வர் திட்டவட்டம்
சனாதன தர்மம் குறித்த கருத்து கேரள முதல்வர் திட்டவட்டம்
ADDED : ஜன 02, 2025 02:42 AM
திருவனந்தபுரம், ''சனாதன தர்மம் குறித்தும், ஆன்மிகவாதி நாராயண குரு குறித்தும் நான் கூறிய கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மா.கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
ஆன்மிகவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சிவகிரி யாத்திரை மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற பினராயி விஜயன் பேசியதாவது:
சனாதன தர்மம் என்பது வர்ணாசிரமத்தை போதிக்கிறது. அதாவது குலத் தொழிலை ஊக்குவிக்கிறது. ஆனால், நாராயண குரு அதை ஏற்கவில்லை.
அவர், ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்பதை போதித்தார். அவர் எந்த நிலையிலும், சனாதன தர்மத்துக்கு ஆதரவாக கருத்து கூறியதில்லை; அதை பின்பற்றி நடக்கவும் இல்லை.
உண்மையில் அவர், சனாதன தர்மத்தை சீர் செய்து தனி தர்மத்தை அறிவித்தார். வரலாற்றை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சனாதன தர்மத்துக்கு எதிராகவும், நாராயண குருவுக்கு எதிராகவும் பினராயி விஜயன் பேசியுள்ளதாக அந்த கட்சி விமர்சித்திருந்தது.
இது குறித்து, பினராயி விஜயன் நேற்று கூறுகையில், ''நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நாராயண குரு குறித்தே பேசினேன். சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் எதையும் கூறவில்லை. சனாதன தர்மம் குறித்த நாராயண குருவின் பார்வையை மட்டுமே வெளிப்படுத்தினேன்,'' என்றார்.