முற்றிலும் கேலிக்குரியது... அமலாக்கத்துறை நோட்டீஸூக்கு கேரள முதல்வர் பதில்
முற்றிலும் கேலிக்குரியது... அமலாக்கத்துறை நோட்டீஸூக்கு கேரள முதல்வர் பதில்
ADDED : டிச 06, 2025 11:06 AM

எர்ணாகுளம்: உள்கட்டமைப்புகளை உருவாக்க அமைக்கப்பட்ட கே.ஐ.ஐ.எப்.பி நிறுவனத்தில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது முற்றிலும் சிரிப்புக்குரியது, என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்ப, கே.ஐ.ஐ.எப்.பி., எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் மூலம், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட மசாலா பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில், லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்கு சந்தைகளில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு, இந்திய மதிப்பில் 2,672.80 கோடி ரூபாய் நிதி திரட்டப் பட்டது.
அப்போது, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு, 466.91 கோடி ரூபாய் நிதி, நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முதல்வர் பினராயி விஜயன், 2018ல் இடது ஜனநாயக முன்னணி அரசில் நிதியமைச்சராக இருந்த தாமஸ் ஐசக், முதல்வரின் முதன்மை தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
தனக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து எர்ணாகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; தேர்தல் நெருங்கும் போது, சில விஷயங்கள் நடக்காமல் இருக்காது. அவர்கள் இதுபோன்ற பல நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றனர். இதுவும் அவற்றில் ஒன்றாக இருக்கலாம். இனி என்ன வரப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியும், நமக்குத் தெரியாது. ஆனால் இந்த நடவடிக்கை முற்றிலும் கேலிக்குரியது. கே.ஐ.ஐ.எப்.பிக்கு எதிரான அவர்களின் அறிக்கை முற்றிலும் சிரிப்புக்குரியது.
கே.ஐ.ஐ.எப்.பி என்பது பற்றி மக்களுக்கு தெரியும். ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி மதிப்பிலான அடிப்படை வசதிகளை உருவாக்குவதே இதன் நோக்கம். இது ஒரு மாற்று நிதி திரட்டும் வழியாக பார்த்தோம். ரிசர்வ் வங்கி வகுத்த விதிகளை மீறி எந்த செயலிலும் நாங்கள் ஈடுபடவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

