ஏ.ஐ., புகைப்படம் பதிவிட்ட கேரள காங்., நிர்வாகி கைது
ஏ.ஐ., புகைப்படம் பதிவிட்ட கேரள காங்., நிர்வாகி கைது
ADDED : டிச 28, 2025 02:50 AM

கோழிக்கோடு: சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி உடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இருப்பது போன்று ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அம்மாநில காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் மார்க்.கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தி உடன் முதல்வர் பினராயி விஜயன் இருப்பது போன்ற புகைப்படத்தை, கேரள காங்கிரசின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினரான கருவற்றுாரைச் சேர்ந்த சுப்ரமணியன் சமூக வலைதளத்தில் சமீபத்தில் பகிர்ந்தார்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம், முதல்வர் பினராயி விஜயனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி மார்க்.கம்யூ., போலீசில் புகார் அளித்தது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், காங்., நிர்வாகியை கைது செய்தனர்.

