UPDATED : பிப் 01, 2024 10:28 AM
ADDED : ஜன 30, 2024 11:42 PM

ஆலப்புழா : கேரளாவில் பா.ஜ., நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புடன் தொடர்புடைய 15 பேருக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் 15 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் அம்மாநிலத்தில் இத்தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள பா.ஜ.,வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருந்த ரஞ்சித் சீனிவாசன், 2021 டிசம்பர் 19ம் தேதி ஆலப்புழாவில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது தாய், மனைவி, மகள் முன்னிலையில் இந்த அராஜகம் நடந்தது. போலீஸ் விசாரித்தபோது, இது அரசியல் பழி வாங்கலின் தொடர் சம்பவம் என்பது தெரிய வந்தது.
பழிக்குப்பழி
அதாவது, பிப்ரவரியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த நந்து கிருஷ்ணா என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றவர்கள் எஸ்.டி.பி.ஐ., எனப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். அதற்கு பழிவாங்கும் நோக்கில், எஸ்.டி.பி.ஐ., மாநில செயலர் கே.எஸ்.ஷான் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் செயலாக ரஞ்சித் சீனிவாசன் கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்தது.
ஆலப்புழாவை சேர்ந்த நைசாம், அஜ்மல், அனுாப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம் சலாம், அப்துல் கலாம், சபருதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷ்ரப் ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., அமைப்பின் உறுப்பினர்கள் என போலீஸ் கூறினர்.
வரவேற்பு
வழக்கு விசாரணை, மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்தது. கடந்த 20ம் தேதி தீர்ப்பு வந்தது. 15 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி அறிவித்தார். தண்டனையை 30ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி, 15 பேருக்கும் துாக்கு தண்டனை விதிப்பதாக நேற்று ஸ்ரீதேவி அறிவித்தார். தீர்ப்பை கேட்க 14 குற்றவாளிகள் ஆஜராகி இருந்தனர்; ஒருவர் மருத்துவமனையில் இருக்கிறார். தீர்ப்பை, பா.ஜ.,வினர் மற்றும் கொலையானவரின் குடும்பத்தினர் வரவேற்றனர்.
ரஞ்சித் சீனிவாசனின் மனைவி, 'நேர்மையாக விசாரணை நடத்தி, அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி' என்றார்.