திருவனந்தபுரத்தில் மலர்ந்தது தாமரை; மேயர் ரேசில் மாஜி டி.ஜி.பி. ஸ்ரீலேகா முன்னணி
திருவனந்தபுரத்தில் மலர்ந்தது தாமரை; மேயர் ரேசில் மாஜி டி.ஜி.பி. ஸ்ரீலேகா முன்னணி
ADDED : டிச 13, 2025 08:22 PM

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றிய நிலையில் அதன் புதிய மேயராக கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், மாஜி டிஜிபியுமான ஸ்ரீலேகா தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுசாரிகளின் கோட்டையான திருவனந்தபுரத்தில் மாநகராட்சியை பாஜ கூட்டணி கைப்பற்றியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலின் போது, பெருவெற்றி பெற்ற இடதுசாரி முன்னணியில் இருந்து பெண் உறுப்பினர் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் இளம்மேயராக பதவியேற்றார்.
இப்படி இடதுசாரிகள் பலம் பொருந்திய திருவனந்தபுரம் மாநகராட்சியில் அங்கு பெரும்பான்மைக்கு தேவையான வார்டுகளில் பாஜ கூட்டணி வெற்றியை எட்டி பிடித்து இருக்கிறது. சாஸ்தாமங்கலம் வார்டில் பாஜ கூட்டணியின் வேட்பாளரான ஸ்ரீலேகா வெற்றி பெற்றிருக்கிறார். தமது டிஜிபி பணிக்காலத்தை முடித்த அவர், பாஜவில் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார்.
தமது வெற்றி குறித்து ஸ்ரீலேகா கூறியதாவது;
சாஸ்தாமங்கலம் வார்டில் இதற்கு முன்னர் வேறு எந்த வேட்பாளரும் இவ்வளவு முன்னிலையில் வெற்றி பெற்றது இல்லை என்பதை அறிந்தேன். இப்படியான தீர்ப்புக்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம்.
யார் மேயராக அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என்பதை கட்சி மேலிடம் தான் முறைப்படி அறிவிக்கும்.
இவ்வாறு ஸ்ரீலேகா கூறினார்.
வெற்றி பெற்றுள்ள ஸ்ரீலேகா கேரளா காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிபிஐ, குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு, சிறை, மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றியவர்.
2017ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் கேரளாவில் டிஜிபி பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
33 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த அவர், 2020ல் ஓய்வு பெற்றார். இருப்பினும் பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைதாகி விடுவிக்கப்பட, அவர் தவறாக சிக்க வைக்கப்பட்டார் என்று தெரிவித்த கருத்தால் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டார்.
2024ம் ஆண்டு பாஜவில் தம்மை இணைத்துக் கொண்ட ஸ்ரீலேகா, தற்போது அரசியலிலும் இறங்கி உள்ளாட்சித் தேர்தலில் பெற்று பெற்றுள்ளார்.
