தடுமாறுகிறது கேரள அரசு நெருக்கடியில் பினராயி விஜயன்
தடுமாறுகிறது கேரள அரசு நெருக்கடியில் பினராயி விஜயன்
ADDED : ஜூன் 01, 2025 12:42 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ளது.
முதல் ஐந்தாண்டு ஆட்சியில் எதிர்பாராத பல்வேறு சவால்களை திறமையாகவே கையாண்டது. 2018ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், 500 பேர் உயிரிழந்தனர்; 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
எதிரான முடிவுகள்
கொரோனா தொற்று பரவலில், 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்தது.
இதை திறம்பட சமாளித்த காரணத்தால், 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் அரியணை ஏறினார் பினராயி.
அதுமட்டுமின்றி, கொச்சி - மங்களூரு - பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும், 'கெய்ல் பைப்லைன்' திட்டம், கொச்சி மெட்ரோ ரயில், கண்ணுார் விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களை இடதுசாரி கூட்டணி அரசு வெற்றிகரமாக முடித்தது.
இவை அனைத்தும், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு துவங்கிய திட்டம் என்றாலும், அதில் சுணக்கம் ஏற்படாமல் முடித்தது மக்கள் மத்தியில் பினராயி அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
நிலம் இல்லா ஏழைகளுக்கு, 'லைப்' திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் வீடுகள் கட்டித்தந்ததும் 2021 வெற்றிக்கு முக்கிய காரணம்.
ஆனால், இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் தான் பினராயிக்கு ஏழரை ஆரம்பித்தது. ஆட்சியையும், கட்சியையும் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதற்காக அவர் எடுத்த முடிவுகள் அவருக்கு எதிராக திரும்பின.
கட்சியின் மாநில செயலர் உட்பட முக்கிய பதவிகளில் மூத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பினராயிக்கு, 'ஜிங்ஜக்' அடிப்பவர்களுக்கே பதவிகள் கிடைத்தன.
மூத்த தலைவர்களான ஜி.சுதாகரன், டி.எம்.தாமஸ் போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. பினராயி அமைச்சரவையில் இருப்பவர்கள் அனைவரும், 'டம்மி' அமைச்சர்களாகவே செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
அனைத்து அதிகாரங்களும் தன் வசம் இருக்கும்படி பினராயி காய் நகர்த்தி வருகிறார். வளர்ச்சி என்ற பெயரில் இந்த அரசு கொண்டு வந்த அனைத்தும், மக்கள் விரோத திட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்றன.
கஜானா காலி
சமூக ரீதியிலான திட்டங்களிலும் தொழிலாளர் வர்க்கத்தினரை பினராயி அரசு கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கிராமப்புறங்களில் சுகாதாரப் பணிகளை செய்யும், 'ஆஷா' பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி சமீபத்தில் மேற்கொண்ட போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை.
கேரள இளைஞர்கள் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வேலைக்கு செல்ல முனைப்பு காட்டுவதால் விவசாயம், தொழில் துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
அரசு கஜானா காலியாகிவிட்டதால், அனுமதிக்கப்பட்ட வரம்புகளை தாண்டி கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அரசு.
: - நமது சிறப்பு நிருபர் -