சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
சபரிமலை கோவிலில் அலங்காரத்துக்கு வாசமில்லா மலர்களை பயன்படுத்த கூடாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 26, 2024 08:53 PM
சபரிமலை:'சபரிமலையில் அலங்காரத்துக்காக, வாசமில்லா மலர்களை பயன்படுத்தக்கூடாது' என, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்:
மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை.
நீண்ட நேரம் வாடாமல் இருப்பதால், இந்த பூக்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பூக்களை பயன்படுத்தக்கூடாது, ஐதீக முறைப்படியான பூக்கள் பயன்படுத்துவதை திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும்.
அப்பம் மற்றும் அரவணை தரம் குறித்து கண்காணிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
சபரிமலையில் மரக்கிளை உடைந்து விழுந்து, கர்நாடகாவை சேர்ந்த சஞ்சு என்ற பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோட்டயம் அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, கோட்டயம் மாவட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில், பத்துக்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்களை ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடாது.
இதை பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். பக்தர்களின் கார்களை, 24 மணி நேரத்துக்கு அதிகமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.