சேவல் கூவுது, தூக்கம் போகுது! போலீசுக்கு போன நூதன புகார்
சேவல் கூவுது, தூக்கம் போகுது! போலீசுக்கு போன நூதன புகார்
ADDED : பிப் 19, 2025 03:21 PM

பத்தினம்திட்டா: சேவல் கூவுவதால் தமது தூக்கம் பறிபோவதாக அண்டை வீட்டார் மீது ஒருவர் புகார் அளித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பத்தினம்திட்டா மாவட்டத்தில் பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணா க்ரூப். மிகவும் வயதானவர். இவருக்கும், அண்டை வீட்டில் வசிக்கும் அனில் குமார் என்ற நபருக்கும் ஏழாம் பொருத்தம். இவ்விருவரின் தகராறுக்கு காரணம் பணமோ, பொருளோ அல்ல. ஒரு சேவல் தான்.
ராதாகிருஷ்ணன் க்ரூப் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அனில்குமார் ஒரு சேவலை வளர்த்து வருகிறார். இந்த சேவல் தினமும் அதிகாலை 3 மணிக்கு கூவுகிறது. அதனால் தமது தூக்கம் கெடுவதாக கூறி அனில்குமார் மீது ராதாகிருஷ்ணன் க்ரூப் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அனில்குமார் வீட்டுக்குச் சென்று வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர். அவரது வீட்டின் மாடியில் உள்ள கூடாரத்தில் சேவல் வைக்கப்பட்டுள்ளதையும், அதன் சத்தத்தால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுவதையும் உணர்ந்தனர்.
பின்னர் ராதாகிருஷ்ணன் க்ரூப், அனில்குமார் இருவரையும் வருவாய் துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். சேவலுக்கு மாடியின் தெற்கு பகுதியில் கூடாரம் அமைத்து, அங்கு சேவலை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதை செய்து முடிக்க 14 நாட்கள் கெடுவும் விதித்துள்ளனர்.

