ADDED : ஜூன் 20, 2025 12:47 AM

திருவனந்தபுரம் : கேரளாவில், கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், கையில் காவிக்கொடியுடன் பாரத மாதா படம் மீண்டும் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் பங்கேற்காமல் அமைச்சர் சிவன்குட்டி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு கவர்னராக இருந்த ஆரிப் முஹமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் ஏற்பட்டது. முடிவில், கவர்னர் ஆரிப் முஹமது கான் மாற்றப்பட்டார்.
புதிய கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டார். இந்தாண்டு துவக்கத்தில் கவர்னராக பொறுப்பேற்றது முதல், மாநில அரசுடன் இணக்கமான சூழலையே அவர் கடைப்பிடித்து வருகிறார்.
இந்த சூழலில், கடந்த 4ம் தேதி கேரள கவர்னர் மாளிகையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்தது. இது மாநில அரசில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த வேளாண் அமைச்சர் பிரசாத்தை கோபமடைய செய்தது.
'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பயன்படுத்தும் இந்தப் படம், அரசு விழாவில் இடம் பெறலாமா?' என கேள்வி எழுப்பிய அவர், நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
இரு வாரங்களுக்கு மேலாக இந்த பிரச்னை அனலை கிளப்பி வரும் நிலையில், சமீபத்தில் இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி மவுனம் கலைத்தார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாரத மாதா படம் அரசு நிகழ்ச்சியில் பயன்படுத்தக் கூடாது என அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், சாரண - சாரணியருக்கான சான்றிதழ் அளிக்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கான மேடையில், காவிக்கொடியை ஏந்திய பாரத மாதா படம் மீண்டும் வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு வந்த மாநில அமைச்சர் சிவன்குட்டியை இது கோபம் அடையச் செய்தது. உடனே அங்கிருந்து அவர் வெளியேறினார்.
இதுகுறித்து அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், “பாரத மாதா புகைப்பட விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை முதல்வர் பினராயி விஜயனே கூறிவிட்டார்.
“மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வது ஆணவத்தின் உச்சம். மஹாத்மா காந்தி அல்லது பிரதமரின் படம் இடம்பெற்றிருந்தால்கூட பரவாயில்லை.
''அது மதிப்புமிக்கதாக இருந்திருக்கும். அரசியல் மையமாக கவர்னர் மாளிகை மாறி வருவது வேதனை அளிக்கிறது. கவர்னர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ்., கூடாரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.
''முன்பு இதுபோல் நடந்தபோதே முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தால், மீண்டும் நடந்திருக்காது,'' என, காங்., எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.